கர்நாடக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
காவிரி நதிநீர் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டங்களை தமிழக விவசாயிகள் முன்னெடுத்தால், கர்நாடக அரசும் போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறது. எனினும், தமிழக விவசாயிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்பதில் மிக தீவிரமாக இருக்கிறார்கள்.. அதனால்தான், இன்று மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். காவிரி விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளை மதிக்காத கர்நாடகாவை கண்டித்து இந்த மனிதசங்கிலி போராட்டம் நடக்கிறது. மேலும், நெய்வேலி கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். முக்கொம்பு மேலணையில் நடக்கும் மனிதசங்கிலி போராட்டத்தில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். போராட்டம் துவங்கியதுமே, விவசாயிகள் காவிரி பாலத்தில் ஊர்வலமாக சென்றார்கள். பிறகு, முக்கொம்பு காவிரி பாலத்தில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் மாநிலத் தலைவர் சின்னசாமி, மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.