“தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார்.
தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். கடந்த 2 மாதங்களில் விநாயகர் சதுர்த்தி போன்ற பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் எந்த ஒரு சிறிய அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு உள்ளது. அதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக அரசு சார்பில், கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பு, உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக, ‘தமிழ் கனவு’ திட்டத்தை தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அறியப்பட்ட சுயமுன்னேற்ற பயிற்சியாளர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகள், தனியார் வேலைவாய்ப்புகள், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. இதில் நானும் இணைந்து ஊட்டி, தேவக்கோட்டை, கோவை உள்ளிட்ட 5 இடங்களில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். 6-வதாக நெல்லையில் கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாடினேன். தமிழ் கனவு நிகழ்ச்சி மூலம் உலக அளவில் போட்டிப்போடும் அளவிற்கு மாணவர்கள் தங்களின் தகுதியையும், திறமையையும் வளர்த்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் கல்லூரியில் நடந்த ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பங்கேற்று மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ”கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். இந்த ஆயுதத்தைக் கொண்டு உலகில் எங்கும் வெற்றி பெறலாம். அதேபோல் மாணவர்களுக்கு உடல்பலனும், மனபலமும் அவசியம் தேவை” என்றார்.