ஏழை நலனுக்கான அரசின் பட்ஜெட் அதிகரிப்பு: பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில் ஏழைகளுக்கான அரசின் பட்ஜெட்டும் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் சுகாதாரம், ரெயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ.7500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

‘இரட்டை என்ஜின்’ அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமை ஏழைகளின் நலனே. நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில் ஏழைகளுக்கான அரசின் பட்ஜெட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் 1 கோடியே 10 லட்சம் ஆயுஷ்மான் கார்டுகளை ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு பெறும் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

ஆயுஷ்மான் திட்டத்தில் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை தரப்படுகிறது. சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகையாக ரூ.2.60 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. மராட்டிய அரசு ‘நமோ ஷேத்காரி மஹாசன்மன் நிதி யோஜனா’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் கீழ் மராட்டிய ஷெட்காரி குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.6,000 கிடைக்கும், அதாவது உள்ளூர் சிறு விவசாயிகளுக்கு ரூ.12,000 சம்மன் நிதி கிடைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக 86 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ‘நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவிலில் பிரதமர் பூஜை மற்றும் தரிசனம் செய்தார்.