உடனடியாக இந்தியப் படைகள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர்

மாலத்தீவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள முகமது முய்ஸு, உடனடியாக இந்தியப் படைகள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மாலத்தீவு.. ஹனி மூன் செல்வோரின் சொர்க்க பூமியாக இருப்பது இந்த மாலத்தீவு தான். குட்டி நாடாக இருந்தாலும் புவிசார் அரசியலில் இது முக்கியமான இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாகவே மாலத்தீவு யாருடைய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறது என்பது ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா மாலத்தீவில் என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்தே வருகிறது. மாலத்தீவில் இத்தனை ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ப்ராஹிம் முகமது. அவர் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் தான் இந்தியா மாலத்தீவு இடையே உறவுகள் மேம்பட்டது. இந்தியாவும் மாலத்தீவுக்குப் பல உதவிகளை மேற்கொண்டது. மேலும், இந்திய ராணுவமும் மாலத்தீவில் இருக்கிறார்கள். ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு நடந்த அதிபர் தேர்தலில் ப்ராஹிம் முகமது தோல்வியடைந்தார். மாலத்தீவு ஜனநாயக கட்சியின் முகமது முய்ஸு வென்று அதிபராகத் தேர்வானார். இந்த புதிய அதிபர் சீனா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படுகிறார். தேர்தல் பிரசாரத்தின் சமயத்திலேயே போதே முகமது முய்ஸு, மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என்று கூறியே பிரச்சாரம் செய்திருந்தார். அதற்கு ஓரளவுக்கு மக்கள் ஆதரவும் கூட கிடைத்தது. இதுவே அவர் தேர்தலில் வெல்லவும் உதவியது.

இதற்கிடையே மாலத்தீவுகள் முழு சுதந்திரமாக இருக்க விரும்புவதால் இங்குள்ள இந்திய வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று புதிய அதிபர் முகமது முய்ஸு தெரிவித்துள்ளார். பிரசாரத்தின் போது இந்திய ராணுவம் மாலத்தீவில் இருக்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்தவர் முய்ஸு. வரும் காலங்களில் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்களை விரைவாக வெளியேற்ற அவர் அழுத்தம் கொடுப்பார் என்றே சர்வதேச வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இந்திய ராணுவம் இங்கே தளத்தை அமைத்திருந்தது. அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இந்தியா என்று இல்லை வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுவே தான” என்று அவர் தெரிவித்தார்.

சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்களையும் கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர். மேலும், இந்தியப் போர்க்கப்பல்கள் மாலத்தீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ரோந்து செல்ல உதவுகின்றன. இதைத்தான் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முய்ஸூ வலியுறுத்துகிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்த விவகாரத்தில் இந்திய அரசுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டோம். இப்போது வரை அது வெற்றிகரமாகவே இருக்கிறது. இரு தரப்பிற்கும் பரஸ்பர நன்மை தரும் உறவைத் தான் நாங்கள் விரும்புகிறோம். இந்திய வீரர்கள் வெளியேறிய பிறகும் மற்ற வீரர்களை அனுமதிக்க மாட்டோம். சீன வீரர்களையும் கூட அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் தெரிவித்தார். இந்திய வீரர்கள் நிச்சயம் வெளியேற்றப்பட வேண்டும் எனக் கூறிய அவர், அதேநேரம் அனைத்து நாடுகள் உடனும் மாலத்தீவு பரஸ்பர உறவை விரும்புவதாகவும் தெரிவித்தார். இருப்பினும், இந்திய ராணுவம் வெளியேறிய பிறகு மெல்ல சீன படைகள் உள்ளே வர வாய்ப்புகள் அதிகம் என்றே சர்வதேச வல்லுநர்கள் கூறுகிறார்கள்.