நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ் எப்போதும் உடனிருப்போம் எனக் கூறி நம்பிக்கை அளித்தார்.
சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்களே சாதிய வன்மத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் வீடு புகுந்து வெட்டிய நிகழ்வு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரிவாளால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த சின்னதுரையும் அவரது சகோதரியும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே சின்னதுரை மற்றும் அவரது சகோதரி மீது தாக்குதல் நடத்திய 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சின்னதுரையின் அம்மாவிடம் வீடியோ கால் மூலம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதலும், நம்பிக்கையும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சின்னதுரையிடம் நலம் விசாரித்தனர். தொடர் சிகிச்சையின் பலனாகவும், பிஸியோதெரபி பயிற்சிகளாலும் முன்பைக் காட்டிலும் இப்போது சின்னதுரையின் உடலில் நல்ல முன்னேற்றம் தென்படத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் ஆசிரியர்கள் உதவியோடு மருத்துவமனையில் இருந்தவாறு காலாண்டு தேர்வைக் கூட அண்ணனும், தங்கையும் எழுதினர். இத்தகைய சூழலில் நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நெல்லை அரசு மருத்துவமனைக்கு சென்று சின்னதுரை மற்றும் அவரது சகோதரியிடம் நலம் விசாரித்ததோடு எப்போதும் உடனிருப்போம் என்ற உறுதியையும் அளித்துவிட்டு சென்றுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு வெளியிட்டுள்ளதாவது, ”நாங்குநேரியில் சாதி என்னும் நஞ்சால் பாதிக்கப்பட்டு, தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரையும், அவரின் சகோதரியையும் சந்தித்து ஆறுதல் கூறி எப்போதும் உடனிருப்போம் என உறுதியளித்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.