மத்திய அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, வெளிப்படையான நடைமுறையைப் பின்பற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தேசிய வேலைவாய்ப்பு விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு 51,000-க்கும் அதிகமான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ரயில்வே அமைச்சகம், அஞ்சல் துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்துள்ளவர்களுக்கான விழா நாடு முழுவதும் 37 இடங்களில் நடைபெற்றன. இதில், காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
மத்திய அரசு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பல்வேறு வேலைவாய்ப்பு விழாக்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய வேலைவாய்ப்பு விழாக்களின் பயணம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றும் 50,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்பு விழாக்கள் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான அரசு உறுதிப்பாட்டின் அடையாளங்கள். நாங்கள் வேலைவாய்ப்பை வழங்குவது மட்டுமின்றி, வெளிப்படையான நடைமுறையையும் பராமரித்து வருகிறோம். ஆட்சேர்ப்பு நடைமுறைகளால் இளைஞர்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது. நியமன நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது மட்டுமின்றி, தேர்வு நடைமுறையை மறுசீரமைக்கவும் அரசு முயற்சி செய்து வருகிறது. பணியாளர் தேர்வு சுழற்சியின் கீழ் ஆட்சேர்ப்பு செய்ய எடுத்துக்கொள்ளும் நேரமும் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அறிவிப்புக்கும் வேலைவாய்ப்பு கடிதத்திற்கும் இடையிலான ஒட்டுமொத்த நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.சி.யின் கீழ் சில தேர்வுகள் இப்போது இந்தி, ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படுகின்றன.
வளர்ச்சியின் வேகம் ஒவ்வொரு துறையிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் சிறந்த சுற்றுலா கிராமமாக தோர்டோ கிராமம் விருது பெற்றுள்ளது. ஹொய்சாலா கோயில் வளாகம் மற்றும் சாந்தி நிகேதனுக்கு உலகப் பாரம்பரிய இடத்திற்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த வளர்ச்சிகள் மற்றும் அதிகரித்த சுற்றுலா, இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதேபோல், விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் புதிய வழிகளை உருவாக்கி வருகின்றன.
வேலைவாய்ப்புகளை வழங்கும் பாரம்பரிய துறைகளை அரசு வலுப்படுத்துகிறது. அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, ஆட்டோமேஷன், பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி போன்ற புதிய துறைகளையும் ஊக்குவிக்கிறது. ட்ரோன் தொழில்நுட்பத் துறையில் புதிய வழிகள் திறந்துள்ளன. ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், ட்ரோன்கள் நில வரைபடத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் லாஹௌல் ஸ்பிதி பகுதியில் ட்ரோன்களைப் பயன்படுத்தி மருந்துகளை விநியோகிக்கப்படுகின்றன. இதன் மூலம் மதிப்பிடப்பட்ட நேரத்தை 2 மணி நேரத்திலிருந்து 20-30 நிமிடங்களுக்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ட்ரோன்களால் நிறைய பயனடைந்துள்ளன. புதிய வடிவமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க உதவியுள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த கதர் விற்பனை தற்போது 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இது கதர் மற்றும் கிராமத் தொழில் துறையில் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, குறிப்பாக பெண்கள் பயனடைந்து வருகின்றனர். எந்தவொரு நாட்டின் எந்தவொரு போட்டிப் பயனையும் முழுமையாக உணர இளைஞர்களின் சக்தி தேவை. புதிய வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இளைஞர்களைத் தயார்படுத்தும் நோக்கில் திறன் மேம்பாடு மற்றும் கல்வியில் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய தேசிய கல்விக் கொள்கை, புதிய மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் ஐ.டி ஆகியவை வந்துள்ளன. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விஸ்வகர்மா நண்பர்களுக்காக பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மறுதிறன் மற்றும் மேம்படுத்துதல் இன்றைய தேவையாக இருப்பதால், பிரதமர் விஸ்வகர்மா திட்டம் விஸ்வகர்மாக்களை நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிகளுடன் இணைக்கிறது.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாகும். இது இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு வழிவகுக்கும். ஆட்சேர்ப்பு செய்பவர்கள்தான் அரசாங்கத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள், அவற்றை அடித்தளத்தில் செயல்படுத்துபவர்கள். இன்று, நீங்கள் அனைவரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் எங்கள் பயணத்தில் முக்கியமான கூட்டாளிகளாக மாறி வருகிறீர்கள். இந்தியாவின் இலக்கை அடைய உங்களின் முழு சக்தியுடனும் பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் கற்றல் நடைமுறையைத் தொடர, ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி போர்ட்டலைப் பயன்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டை வேகமாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவும். இன்று புனிதமான ஷரத் பவுர்ணமி நாள். நாட்டிற்குள் வேலைவாய்ப்பை உருவாக்கும் வழிமுறையான உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற செய்தியைப் பரப்புங்கள். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.