பாலஸ்தீன விவதாரத்தில் இந்திய அரசு குழப்பத்தில் உள்ளது என்றும், இதற்கு முந்தைய எந்த அரசிடமோ, நாட்டின் சரித்திரத்திலோ இப்படியொரு குழப்பத்தை பார்க்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
காசா போர் நிறுத்தம் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட வரைவுத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது குறித்து சரத் பாவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் கொள்கை மாறியிருக்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலின் காரணங்களை எப்போதும் ஆதரித்தது இல்லை” என்றார்.
இந்த விவகாரத்தில் அரசின் முரண்பாடுகளை சரத் பவார் சுட்டிக் காட்டினார். இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியதற்கு அடுத்த நாள் அக்.8-ம் தேதி பிரதமர் மோடி, “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அக்.10-ம் தேதி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசிய பின்னர் இஸ்ரேலுக்கான இந்தியாவின் ஆதரவினை மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு சில நாட்களுக்கு பின்னர் அக்.12-ம் தேதி, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, பாலஸ்தீனம், இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சாத்தியமான ஓர் அரசை நிறுவதற்கான நீண்ட கால ஆதரவினை இந்தியா நம்புவதாக தெரிவித்திருந்தார் என்றார். இஸ்ரேஸ் – ஹமாஸ் போர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டினை சரத் பவார் எடுப்பது இது முதல்முறை இல்லை. போர் ஆரம்பித்த சில நாட்களுக்கு பின்னர், “நமது பிரதமர் மோடி இஸ்ரேலுடன் நிற்பது துரதிர்ஷ்டவசமானது” என்று தெரிவித்திருந்தார்.