கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் ‘கமலா’!

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 113. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலாக 22 இடங்களை காங்கிரஸ் பெற்றது. பாஜக 66 இடங்களிலும் மதச் சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வென்றது.

கர்நாடகாவில் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 113 இடங்கள் கிடைக்கவில்லை. அந்த தேர்தலில் பாஜக 104 ; காங்கிரஸ் 80; மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வென்றது. இதனையடுத்து காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி ஆட்சியை அமைத்தது. மொத்தம் 120 எம்.எல்.ஏக்களுடன் இந்த கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி பதவியில் இருந்தார். ஆனால் 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 3 மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள், பாஜகவால் வளைக்கப்பட, குமாரசாமி ஆட்சி 2019-ல் கவிழ்ந்தது. பின்னர் பாஜக ஆட்சி அமைந்தது. ஆனால் அண்மைய சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையைவிட அதிகமான இடங்களைப் பெற்றது; பாஜகவால் என்னதான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்தாலும் ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு குறைவான இடங்கள் கிடைத்தது என்பது காங்கிரஸுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.

இருந்த போதும் காங்கிரஸ் வெற்றி பெற்றது முதலே முதல்வர் பதவி தொடங்கி அமைச்சர்கள் நியமனம் வரை பெரும் உட்கட்சி போராட்டம்தான். இப்போது வரை இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னொரு பக்கம், பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியும் அமைத்துவிட்டது. என்னுடைய ஆட்சி கவிழ்த்ததே இப்போதைய முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார். இவர்களுடைய அரசாங்கமும் 6 மாதத்தில் கவிழப் போகிறது அலாரம் அடித்தார் மாஜி முதல்வர் குமாரசாமி. கர்நாடகா பாஜக தலைவர்களும் லோக்சபா தேர்தல் வரை கூட கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி தாங்காது; லோக்சபா தேர்தலுடன் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறப் போகிறது என உறுதியாக கூறி வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்கக் கூடிய ஆபரேஷன் கமலா அல்லது ஆபரேஷன் லோட்டஸ் அல்லது ஆபரேஷன் தாமரையை பாஜக, கர்நாடகாவில் தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா பகீர் குற்றச்சாட்டு ஒன்றை பகிரங்கமாக வெளியிட்டார். பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏக்களுக்கு ரூ50 கோடி பேரம் பேசப்படுகிறது என்பதுதான் அந்த குற்றச்சாட்டு.மண்டியா தொகுதி எம்.எல்.ஏ. ரவிக்குமார் கவுடா. பாஜகவை சேர்ந்த வேலையில்லாத 3 பேர் கொண்ட டீம், ரூ50 கோடி பேரம் பேசுகிறது; அமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி கொடுக்கிறது என கூறியதுடன் இதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருக்கிறது எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

இது குறித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேற்று கூறுகையில், ஆபரேஷன் கமலா மூலம் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது. ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை கூட பாஜகவால் வளைத்துவிட முடியாது. ரவிக்குமார் கவுடா எம்.எல்.ஏவின் குற்றச்சாட்டு குறித்து எனக்கு தெரியாது. இதுவரை ரவிக்குமார் கவுடாவிடம் நான் பேசவில்லை என்றார்.

பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் டிகே சிவகுமார், பாஜகவின் ஆபரேஷன் கமலா ஒருபோதும் வெல்லாது என்றார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு அதிகமான எம்.எல்.ஏக்களை வைத்திருக்கிறது. நாங்கள் மிக குறைவான எம்.எல்.ஏக்களைத்தான் வைத்துள்ளோம். பாஜகவுக்கு 66; மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 19 இடங்கள் என்கிற நிலையில் எப்படி ஆட்சி அமைக்க முடியும்; காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்கிறது என்கிறது பாஜக.