கேரளா குண்டு வெடிப்பு: மார்ட்டின் வீட்டில் போலீஸார் சோதனை!

கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய டொமினிக் மார்ட்டினின் பூர்வீக வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கொச்சியில் களமச்சேரியில் உள்ள கிறிஸ்துவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடிவிபத்துகள் நடந்தன. இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமான வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தம்மனம் பகுதியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் நான்தான் என கொடக்கராக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மார்ட்டின் ரிமோட் செயலி முறையில் எல்இடி வகை வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது உறுதியானது. சரணடைவதற்கு முன் முகநூல் நேரலையில் தோன்றிய டொமினிக், கிறிஸ்துவ மதப்பிரிவினரிடம் வெறுப்பை தூண்டும் பேச்சுகளைத் தவிர்க்க பல முறை கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் அதை மறுத்ததால் குண்டுவெடிப்பை நிகழ்த்தினேன். இந்த குண்டுவெடிப்பில் நான் மட்டுமே செய்தேன், வேறு யாரும் உதவவில்லை. அது போல் வெடிகுண்டு தயாரிக்க வெடிப்பொருள்களை கொச்சியிலிருந்து வாங்கினேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண் ஒருவர் பலியாகிவிட்டார். இவர் தொடுபுழாவை சேர்ந்த குமாரி ஆவார். இவருக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அது போல் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட மார்ட்டினிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் அவர் தனது பூர்வீக வீட்டில் வைத்து வெடிகுண்டை தயாரித்ததாக தெரிவித்திருந்தார். அதன்படி ஆலுவா பகுதியில் அத்தாணியில் உள்ள மார்ட்டினின் பூர்வீக வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.