ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு!

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிரச்சினையை சரி செய்யும் பணியில் அப்போது ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியது.
இந்த ரயில் விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் ஏராளமான பயணிகள் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள், போலீஸார், மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 13 பயணிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 40 பேருக்கு தீவிரக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த விஜயநகர ஆட்சியர் எஸ்.நாகலட்சுமி தெரிவித்தார்.

இந்த விபத்தில் ரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட் மற்றும் ரயில்வே காவலர் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில், ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் அளிக்கப்படும் என்றும் பிற மாநிலப் பயணிகளைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஆந்திர ரயில் விபத்து தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இரயில்கள் மோதி நிகழ்ந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். 2023 ஜூன் மாதம் பாலசோர் இரயில் விபத்து ஏற்பட்டு, சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணி மனமிரங்குகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற விழைகிறேன். பெருவாரியான இந்தியர்கள் தங்களின் பயணத்திற்காக இரயில்களையே சார்ந்திருக்கும் சூழலில் குறுகிய கால இடைவெளியில் விபத்துகள் தொடர்கதையாவது மிகுந்த கவலையளிக்கிறது. இரயில்வே பாதுகாப்பு முறைகளை உடனடியாக ஒன்றிய அரசு மீளாய்வு செய்து, மேம்படுத்திப் பயணிகளின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் முதல்கட்ட தகவலின்படி இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாகப்பட்டினம் – ராயகடா ரயில் சிவப்பு சிக்னலை கவனிக்காமல் மீறிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தை அடுத்து அந்த மார்க்கத்தில் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 22 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.