விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நவம்பர் 15க்கு ஒத்திவைப்பு!

சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது. அதன்படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அப்போது விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 210 பக்க குற்றப்பத்திரிக்கை 2023ஆம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தனர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இதுவரை நான்கு முறை இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் மூன்று முறை விஜயபாஸ்கரும் ஒருமுறை அவரது மனைவி ரம்யாவும் ஒரு முறை இவர்களது வழக்கறிஞர்களும் விசாரணைக்கு ஆஜராகினர்.

ஐந்தாவது முறையாக இந்த வழக்கு நேற்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கரோ அவரது மனைவி ரம்யாவோ நேரில் ஆஜராகவில்லை, அவர்களுக்கு பதிலாக அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விஜயபாஸ்கர் தரப்பினர் அவர் மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிக்காயின் நகல் முழுவதையும் கேட்டிருந்தனர் தற்போது வரை அந்த நகல் முழுமையாக கொடுக்காததால் அடுத்த விசாரணைக்கு முன்பாக முழுமையான குற்றப்பத்திரிக்கை நகல் அனைத்தையும் விஜயபாஸ்கர் தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வருகின்ற நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.