ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ரூ.400 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மும்பை போலீஸார், க்ரைம் பிராஞ்ச் போலீஸார் மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களில் அம்பானிக்கு மிரட்டல் விடுத்துவந்த 3வது மின்னஞ்சல் இது.
முன்னதாக, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வந்த முதல் மிரட்டல் மின்னஞ்சலில் ரூ.20 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. காம்தேவி காவல் நிலையத்தில் அம்பானி வீட்டு பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தொடர்ந்து சனிக்கிழமை ரூ.200 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) ரூ.400 கோடி கேட்டு 3-வது மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. தற்போது இது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிஹாரின் தார்பங்கா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொலைபேசி வழியாக கொலை மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது மும்பை சர் ஹெச்.என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையை தகர்க்கப்போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இம்மாத தொடக்கத்தில் போர்ப்ஸ் இதழ் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் (ரூ.7.63 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்திருந்தார். கவுதம் அதானி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.