நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் எஸ்எம்எஸ் மெசெஜ்களை நம்ப வேண்டாம் என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எஸ்எம்எஸ் வந்தால் பதற்றம் வேண்டாம் எனவும் மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, பல்வேறு நகரங்களில் உள்ள மின்சார வாரியம் மக்கள் தங்கள் மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்த நினைவூட்டும் செய்தியை வாட்ஸ்அப் மற்றும் குறுச்செய்திகள் மூலமாக அனுப்பிவருகின்றன. இத்தகைய செய்திகள் முன்னதாகவே மக்களுக்கு அனுப்பப்படும் நிலையில், மின்கட்டணம் செலுத்த கடைசி தேதிக்கு முன்பாக குறுச்செய்திகள் அனுப்பப்படுவது தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. எளிதில் ஏமாற்றக்கூடிய, ஆன்லைன் பற்றி பெரிதாக அறியாத நபர்களை குறிவைத்தே இதுபோன்ற மோசடிகளில் ஹேக்கர்கள் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் மக்களுக்கு மின் கட்டணத்தை செலுத்தும் படி வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பப்படும் மெசேஜில் மின்சார அலுவலகத்திற்கு தொடர்பில்லாத மோசடி நபர்களின் தொடர்பு எண்கள் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி கும்பலிடம் இருந்து “அன்புள்ள நுகர்வோரே உங்கள் மின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும். இன்று இரவு 9.30 மணிக்கு மின்வாரிய அலுவலகத்திற்கு உங்களுடைய முந்தைய மாத நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றால், உடனடியாக எங்கள் மின்வாரிய அதிகாரி 8260303942 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்” என்ற மெசெஜை மக்களுக்கு அனுப்பி வருகின்றனர். அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் மக்களிடம் உடனடியாக பணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் என அச்சுறுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாட்ஸ்அப்பில் மெசேஜ் கிடைக்கப் பெற்றாலோ, எஸ்எம்எஸ் வந்தாலோ அதில் கொடுத்துள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் அந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்கட்டணம் கட்டா விட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் எஸ்எம்எஸ் பார்த்து பதற்றமடையாமல் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நம்பகத்தன்மையை சோதிக்கும் படி மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.