பணத்திற்காக கொலை செய்வதற்கு கூட தயங்காத நிலை திமுக ஆட்சியில் தொடர்வதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியா என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கிரானைட் கல் குவாரி ஏலத்திற்காக டெண்டர் பெறப்பட்டது. குவாரிகளை குத்தகைக்கு எடுப்பதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்ய ஏராளமானோர் வந்திருந்தர். மற்ற கட்சியினர் குவாரி குத்தகைக்கு விண்ணப்பிப்பதை தடுத்து ஆளுங்கட்சியினர் வாக்குவாதம் செய்துள்ளனர். பாஜகவைச் சேர்ந்த பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன் என்பவர், தன் தம்பி முருகேசன் என்பவருக்கு கல் குவாரி டெண்டருக்காக விண்ணப்பிக்க பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் அங்கு வந்துள்ளார். அப்போது, திமுகவினர் அவர்களை தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன் தாக்கப்பட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மரத் தடுப்புகள் உடைக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்டோர் கத்திக்கொண்டு, தகராறில் ஈடுபட்டதில் கலெக்டர் அலுவலகமே ரத்தக்களறி ஆனது. இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்ட 10 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கலெக்டர் ஆபீசில் நடந்த இந்த மோதல் காரணமாக, கல் குவாரி டெண்டரை ஒத்தி வைத்தார் மாவட்ட ஆட்சியர் கற்பகம்.
குவாரி ஏலம் விவகாரத்தில் பாஜகவினர், திமுகவினரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது:-
பெரம்பலூர் கல் குவாரி ஒப்பந்தத்தை தங்களுக்கே தர வேண்டும் என்றும், ஏலத்தில் பங்கேற்க வந்த பாஜகவினர் மற்றும் காவல் துறையினரை திமுகவை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இரு நாட்களுக்கு முன் சென்னை எண்ணூரில் இதே போன்ற ஒப்பந்த விவகாரத்தில் திமுகவின் இரு குழுக்களின் இடையேயான மோதலில் ஒருவர் நடுத் தெருவில் ஓட விட்டு படுகொலை செய்யப்பட்டது கொடூரம்.
அரசு பணி ஒப்பந்தங்களை பெறுவதற்காக வன்முறை வெறியாட்டத்தில் திமுகவினர் ஈடுபடுவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை தெளிவாக்குகிறது. அரசு ஒப்பந்தங்களில் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் நடைபெறுவதை இந்த சம்பவங்கள் உறுதி செய்கின்றன. பணத்திற்காக கொலை செய்வதற்கு கூட தயங்காத நிலை திமுக ஆட்சியில் தொடர்வதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.