தமிழகத்தில் அதிகார வரம்பு மீறி செயல்படுவது ஆளுநர் ரவிதான்: ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் முதல்வர் மீதோ, அரசு மீதோ தவறில்லை. அதிகார வரம்பு மீறி செயல்படுவது ஆளுநர் ரவிதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் இன்று கூறியதாவது:-

மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம், அமைச்சர் நீக்கல் விவகாரம் ஆகியவற்றில் முதல்வர் ரங்கசாமி வாய் திறக்க மறுப்பது ஏன்? முதல்வருக்கு பொறுப்பு உள்ளது. மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளில் முதல்வர் வாய் மூடி கிடப்பது சரியானது அல்ல. வாய் திறக்கக் கூடாது என்பதை மோடியிடம் கற்றுக்கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. புதுச்சேரியில் ரேஷன் கடைகளைத் திறக்கவேண்டும். பொறியியல் பல்கலைக்கழகத்தில் போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது பற்றி முயற்சி எடுப்போம்.

தமிழகத்தில் முதல்வரும், ஆளுநரும் பேசவேண்டும் என்று தமிழிசை கோரியுள்ளதை கேட்கிறீர்கள். அதை முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் தவறு முதல்வர் மீதோ, அரசு மீதோ இல்லை. இது தொழில் நிறுவன பணியாளர் பிரச்சினை அல்ல. ஆளுநர் ரவி பாஜக பிரதிநிதியாகவும், ராஜ்நிவாஸ் பாஜக அலுவலகமாக செயல்படுகிறது. அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் செயல்படவில்லை. அதிகார வரம்பு மீறி செயல்படுகிறார். அவர் சொல்வதை அண்ணாமலை நியாயப்படுத்துவார். ஆளுநர் ரவி துவக்கத்தில் இருந்து வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார். இவ்விவகாரத்தில் ஆளுநர் செயல்பாடுதான் தவறாகவுள்ளது.

ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவை வீழ்த்துவதுதான் இண்டியா கூட்டணி நிலைப்பாடு ஆகும். கேரளத்தில் பாஜக ஓர் இடம் கூட வெல்லாது. நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலங்களில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். தமிழகத்தில் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினாலும் இண்டியா கூட்டணியில் மாற்றம் வராது. அத்துடன் பாஜக கொள்கைகளை ஏதும் அதிமுக எதிர்க்கவில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கான உண்மையான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.