கேரளா குண்டுவெடிப்பு: டோமினிக் மார்ட்டினுக்கு நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவல்!

கேரளா குண்டுவெடிப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான டோமினிக்கை நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் சம்பவ இடத்தில் ஒரு பெண்ணும் சிகிச்சை பலளனிக்காமல் மேலும் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த அன்றே, தம்மனம் பகுதியைச் சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குக் காரணம் நான்தான் என கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர் ரிமோட் செயலி முறையில் ஐ.ஈ.டி வகை வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது உறுதியானது.

சரணடைவதற்கு முன் முகநூல் நேரலையில் தோன்றிய டோமினிக், “கிறிஸ்துவ மதப்பிரிவினரிடம் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்க்க பல முறை கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால், அவர்கள் அதை மறுத்ததால் குண்டுவெடிப்பை நிகழ்த்தினேன்’ எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட டோமினிக் மீது கொலைக் குற்றம், வெடிபொருள்களை வைத்திருந்தது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதற்காக, நீதிமன்றத்தில் ஆஜரான டோமினிக்கை நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக வழக்கறிஞரை நியமனம் செய்துகொள்ளலாம் என நீதிமன்றத் தரப்பிலிருந்து பலமுறை அறிவுரை தரப்பட்டுள்ளது. ஆனால், டோமினிக் மார்ட்டின் தானே வழக்கை எதிர்கொள்வதாகக் கூறியிருக்கிறார்.