இந்தியா-வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர்.
இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனா ஆகியோர் காணொளிக் காட்சி மூலமாக இந்தியாவின் உதவியுடனான மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். இதில், அகர்தலா-அகவுரா குறுக்கு எல்லை ரயில் இணைப்பு, குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் வங்கதேசத்தின் ராம்பாலில் உள்ள மைத்ரீ சூப்பர் அனல் மின் நிலையத்தின் அலகு 2 ஆகும். அகர்தலா-அகௌரா குறுக்கு எல்லை ரயில் இணைப்பு ஒரு வரலாற்றுத் தருணம். இது வடகிழக்கு மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான முதல் ரயில் இணைப்பு. இந்த மூன்று திட்டங்களும் இந்தியாவின் உதவியுடனான வளர்ச்சி திட்டங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த மூன்று திட்டங்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று ஹசீனா கூறினார்.
இந்தியாவின் அகர்தலாவிலிருந்து வங்கதேசத்தின் அகவுரா வரை 15 கி.மீ. தூரத்துக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5 கி.மீ. தூரம் இந்தியாவிலும், 10 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் ரயில் பாதை போடப்பட்டுள்ளது.