காமராஜர் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு: பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரப் போராட்ட வீரரும் 30 ஆண்டு காலம் சிறை வாழ்க்கை அனுபவித்தவருமான சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்திருக்கிறார். 102 வயதில் இன்றைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் சங்கரய்யா. அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் ஆளுநர் அதை மறுத்திருக்கிறார். இதைவிட மோசமான ஆளுநர் இருந்தது இல்லை. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்த பொதுவுடைமைவாதி சங்கரய்யா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்திருக்க வேண்டும்.

சமூக நீதி, திராவிடம் பற்றி பேசுபவர்களை கண்டாலே ஆளுநருக்கு பிடிக்காது. அதனால் தான் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்திலே ஆளுநர் இருக்கிறார். தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை உள்ளவர் போல பேசிய ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை. சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுப்பதற்கான காரணத்தை கூற முடியுமா ?. விளக்கம் அளிக்க ஆளுநர் தயாரா?.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கையெழுத்திடுவது தான் ஆளுநரின் வேலை. தினமும் பொய் சொல்வதையே தனது தொழிலாகக் கொண்டுள்ளார் ஆளுநர். தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்த பின் ஆளுநர் தனது கருத்துக்களை பேசட்டும். எனவே, ஆளுநரை கண்டித்து நாளை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை. அதை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.