தெலுங்கானாவை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்ற வேண்டும் என்று பாஜக நடிகை விஜயசாந்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது தெலுங்கனா தேர்தல் களத்தில் அனலை கிளப்பிவிட்டுள்ளது.
தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ல் எண்ணப்படும். தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் பாஜகவும் முடிந்த அளவு முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று கட்சிகளிலுமே அதிருப்தியாளர்கள் மாறி மாறி கட்சிகளைத் தாவிக் கொண்டே இருக்கின்றனர். இன்னொரு பக்கம் தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர்களை குறிவைத்து அமலாக்கப் பிரிவு சோதனைகளையும் நடத்தி வருகிறது.
தெலுங்கானா தேர்தலில் பாஜகவில் சீனியரான நடிகை விஜயசாந்தி ரொம்பவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே பாஜகவை விட்டு நடிகை விஜயசாந்தி விலகிவிடுவார் என்றே கூறப்பட்டு வருகிறது. தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் விஜயசாந்தி தமது எக்ஸ் பக்கத்தில் இடைவிடாமல் சில பதிவுகளை போட்டு வருகிறார். அதில், தெலுங்கானாவை காங்கிரஸ்தான் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். அத்துடன் தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியுடன் திரைமறைவில் பாஜக கை கோர்த்திருப்பதையும் விமர்சித்திருக்கிறார் விஜயசாந்தி. இதனைத் தொடர்ந்து நேற்று முதலே தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. நடிகை விஜயசாந்தி எந்த நேரத்திலும் பாஜகவை விட்டு விலகும் முடிவை அறிவிப்பார்; உடனே காங்கிரஸில் இணையக் கூடிய சாத்தியங்களும் இருக்கின்றன என்கின்றன தெலுங்கானா வட்டார தகவல்கள்.
1998-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து அதிரடி காட்டியவர் விஜயசாந்தி. அதன் பின்னர் தனிக் கட்சி தொடங்கிப் பார்த்தார். அது தேறாத நிலையில் அப்போதைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தார். தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தினார். அந்த கட்சியை விட்டு காங்கிரஸிலும் இணைந்தார். பின்னர் மீண்டும் தாய்க் கட்சி பாஜகவுக்கே திரும்பிய விஜயசாந்தி இப்போது காங்கிரஸுக்கு தாவ ரெடியாகிவிட்டார் என்றே கூறப்படுகிறது.