பட்டியலின மக்களை ஒரு மனித உயிரினமாக மதிக்காத சமூகத்தில்தான் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது என காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி குளிக்கச் சென்ற விளிம்புநிலை (பட்டியலின) இளைஞர்கள் 2 நபர்களை சாதியை கேட்டு தாக்கியும், அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் கொடுமை செய்த வக்கிரம் பிடித்தவர்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நாகரீக சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், விளிம்புநிலை மக்களுக்கு எதிராக இதுபோன்ற மோசமான குற்றம் நடைபெறுவது பெரிதும் அதிர்ச்சியளிக்கிறது. விளிம்புநிலை மக்களை ஒரு மனித உயிரினமாக மதிக்காத சமூகத்தில்தான் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை கைது செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் இதுபோன்ற அநாகரீக சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தேசிய பாதுகாப்புச்சட்டம், எஸ்சி.எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஐபிசி சட்டபிரிவுகள் 294 மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்றுத் தரவேண்டும். மேலும், மாவட்டம் முழுவதிலும் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை அதிகளவில் நடத்தப்பட வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு இது போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க, மனித சமூகத்தில் வாழத் தகுதியற்ற வன்கொடுமைக் குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ள இளைஞர்களுக்கு மருத்துவ வசதிகளும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.