பெரம்பலூரில் வரும் நவம்பர் 8ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர்எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என பல்வேறு சம்பவங்களால், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு பல்வேறு வகைகளில் சிரமப்பட்டு வருகின்றனர். இது போதாதென்று, ஆங்காங்கே திமுகவினர் பல்வேறு அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். தி.மு.கவினரின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வரும் தி.மு.க அரசைக் கண்டித்தும், அ.இ.அ.தி.மு.க. பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில், வருகிற 8ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.