இலங்கையின் கண்டியில் உள்ள அஸ்கிரிய பெளத்த மடாலயத்தின் பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரா் மற்றும் மல்வத்து மடாலயத்தின் பீடாதிபதி குரு திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தாா்த்த சுமங்கல தேரா் ஆகியோரை இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை சந்தித்தாா்.
அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட பெரும் பற்றாக்குறை காரணமாக, இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கடந்த 1948-ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும். இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகப் போராடி வரும் இலங்கைக்கு ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின்கீழ் இந்தியா ஆதரவளித்து வருகிறது. கடன்கள் மற்றும் செலாவணி ஆதரவின் மூலம் கடந்த ஆண்டு 4 பில்லியன் அமெரிக்க டாலா் அளவில் இலங்கைக்கு இந்தியா பன்முக உதவிகளை வழங்கியது.
இந்தச் சூழலில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இலங்கைக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று புதன்கிழமை சென்றார். கண்டியில் அஸ்கிரிய பெளத்த மடாலயத்தின் பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரா் மற்றும் மல்வத்து மடாலயத்தின் பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தாா்த்த சுமங்கல தேரா் ஆகியோரை சந்தித்த அவா், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான வரலாற்று, கலாசார ரீதியிலான நீடித்த தொடா்புகள் குறித்து அவா்களுடன் விவாதித்தாா். அப்போது, இருதரப்பு நெருக்கமான உறவுகளை அங்கீகரிப்பதாகக் கூறிய அஸ்கிரிய மடாலய பீடாதிபதி , பொருளாதார நெருக்கடியின்போது இந்தியாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஆதரவுக்கு நன்றி தெரிவித்தாா் என்று ‘எக்ஸ்’ வலைதளத்தில் மத்திய நிதியமைச்சகம் பதிவிட்டுள்ளது.
நிா்மலா சீதாராமனின் இப்பயணத்தின்போது, இலங்கை மத வழிபாட்டுத் தலங்களில் சூரியமின் உற்பத்திக்கான இருதரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கையொப்பமாகவுள்ளது. இலங்கையுடன் பெளத்த மதம் சாா்ந்த உறவுகளை ஊக்குவிப்பதற்கான ரூ.107.47 கோடி நிதியுதவியின்கீழ் மேற்கண்ட திட்டத்துக்கு ரூ.82.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
முன்னதாக, கொழும்பு விமான நிலையத்துக்கு வருகை தந்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை, இலங்கை நீா் விநியோகம் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜீவன் தொண்டமான் வரவேற்றாா்.