நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். அவர் முதலில் மது ஒழிப்பிற்கு குரல் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் வரும் 2026 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலை சந்திப்பார் என தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து அவர் நேரடியாக அறிவிக்காவிட்டாலும், 12, 10 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பட்டும்படாமல் பேசியுள்ளார். அதாவது வரும் தேர்தலில் நிறைய புதிய கட்சிகள் வரலாம். புதியவர்களுக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். அது போல் தேர்தலில் யாரிடமும் பணம் வாங்காமல் ஜனநாயக கடமையை ஆற்றுமாறு பிள்ளைகளாகிய நீங்கள் சொன்னால் உங்கள் பெற்றோர் கேட்டுக் கொள்வர். இத்தனை செலவு செய்து வெல்லும் எம்எல்ஏ போட்ட காசை திருப்பி எடுக்க ஊழலைத்தான் செய்வார் என தெரிவித்திருந்தார். அது போல் காமராஜர், அண்ணாவை படியுங்கள் என இளைஞர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அது போல் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடச்சாலை, இலவச சட்ட உதவி மையம் போன்றவற்றை தொடங்கியுள்ளார். மேலும் தனது ரசிகர்களிடமும் மக்களுக்கு தேவையான நன்மையை செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் லியோ வெற்றி விழா நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் விஜய்யிடம் நெறியாளர் 2026 என்ற ஒரு வார்த்தைக்கு பதில் சொல்லுமாறு கேட்டார். அதற்கு விஜய்யோ 2025 க்கு பிறகு வருகிறது, உலக கால்பந்து போட்டி நடைபெறுகிறது, கப் முக்கியம் பிகிலு என கூறினார். உடனே ரசிகர்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அதாவது அரசியல் பிரவேசம் குறித்து விஜய் அறிவிப்பார் என்பதால் நெறியாளர் 2026 குறித்து கேட்டார். ஆனால் விஜய்யோ பட்டும்படாமல் பதில் அளித்தார். அது போல் உங்கள் அமைச்சரவையில் லோகேஷ் கனகராஜுக்கு என்ன துறை என கேட்ட போது போதை மருந்து தடுப்பு பிரிவு என்றார். பின்னர் நீங்கள் கற்பனையாக கேட்டதற்கு நானும் கற்பனையாக சொல்லிவிட்டேன் என கூறிவிட்டு சிரித்தார். எனவே விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் முதலில் மது ஒழிப்பிற்கு குரல் கொடுக்க வேண்டும். சினிமாவை விட்டு விட்டு 10 ஆண்டுகளுக்கு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதன் பிறகு தாராளமாக அரசியலுக்கு அவர் வரலாம் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.