காசா மீது அணுகுண்டு வீச வாய்ப்பு என சொன்ன இஸ்ரேல் அமைச்சர் சஸ்பெண்ட்!

காசா மீது அணு குண்டு வீசி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் கூறினார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் அமிஹாயை சஸ்பெண்ட் செய்து நெதன்யாகு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஏவுகணை தாக்குதலால் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு பதில் நடவடிக்கையை ஆரம்பித்தது. அப்போது முதல் கிட்டத்தட்ட ஒருமாதத்தை நெருங்கி போர் இரு தரப்பினருக்கும் இடையே நீடித்து வருகிறது. 28 வது நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இன்றும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் முதலில் தாக்குதலை நடத்திய நிலையில், பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. இப்போது ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது. காசா பகுதியில் இஸ்ரேல் முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஹமாஸ் அமைப்பு முழு வீச்சில் ரெடியாகி வருகிறது. இதனால் மிகப் பெரிய மற்றும் நீண்ட போருக்கு ஹமாஸ் தயாராகி வருகிறது. இதன் மூலம் போர் நிறுத்தம் வரும் வரை இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த முடியும் என்று ஹமாஸ் அமைப்பு நம்புகிறது.

காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் அங்கே ஆயுதங்கள், ஏவுகணைகள், உணவு மற்றும் மருத்துவப் பொருட்களைக் குவித்து வருகிறது. அதுமட்டும் இன்றி பல கி.மீட்டர்களுக்கு ஹமாஸ் அமைப்பினர் வைத்து இருக்கும் சுரங்க பாதைகள் மூலம் இஸ்ரேல் படை மீது கொரில்லா தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறதாம். ஹமாஸ் வசம் பிணையக் கைதிகள் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிப்பது தொடர்பாக கத்தார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இஸ்ரேலில் இருக்கும் அனைத்து கைதிகளையும் விடுவித்தால் தங்களிடம் இருக்கும் அனைத்து பிணையக் கைதிகளையும் விடுவிப்போம் என்று ஹமாஸ் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இதனால், போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால், காசா மற்றும் இஸ்ரேல் என இரு இடங்களிலுமே பதற்றம் நிறைந்தே காணப்படுகிறது. காசாவில் இதுவரை 9,500 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே, காசா மீது அணு குண்டு வீசி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் கூறினார். இஸ்ரேல் அமைச்சரின் இந்த பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், உடனடியாக மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமைச்சர் அமிஹாயின் கருத்தில் உண்மையில்லை. அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இஸ்ரேலும் இஸ்ரேல் படையும் சர்வதேச சட்டத்தை பின்பற்றி செயல்படுகிறது. எனவே, வெற்றி கிடைக்கும் வரை இதையே பின்பற்றுவோம்” என்றார்.

இதனிடையே, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் அமிஹாயை சஸ்பெண்ட் செய்து நெதன்யாகு நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம் போருக்கு பிறகு இஸ்ரேல் அமைத்த பாதுகாப்பு கேபினட் குழுவில் அவருக்கு இடமும் மறுக்கப்பட்டு இருக்கிறது.