நாகாலாந்து மக்களை நாய் கறி சாப்பிடுபவர்கள் என ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி
தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அவருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கிறார் என்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டுகின்றன. எனினும், தமிழக அரசை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துப் பேசி வருகிறார். அதே சமயம் ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றினார். சமீபத்தில் கூட ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை உண்மைத் தகவலை மறைத்ததாக தமிழக அரசு குற்றம்சாட்டியது. இதனிடையே திமுக முன்னணி தலைவர்கள் ஆளுநரை காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு தொல்லை தர வேண்டும் என்றே செயல்படுகிறார். எத்தனையோ ஆளுநர்களை தமிழ்நாடு பார்த்துள்ளது. ஆனால், ஆர்.என்.ரவி வேண்டும் என்றே வம்புக்கு, சண்டைக்கு இழுக்கிறார். நாகாலாந்தில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவிக்கு ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா? ஊரைவிட்டே விரட்டி அடித்தார்கள். தவறாக நினைக்கக் கூடாது. ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். நாய் கறி சாப்பிடும் நாகாலாந்து காரர்களே சொரணை இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டினார்கள் என்றால், உப்புப் போட்டு சாப்பிடும் தமிழகத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும்” என்று பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள் என்றும், ஆர்.எஸ்.பாரதி நாய் கறி உண்பவர்கள் என இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது என்றும் சாடினார். மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ்.பாரதிக்கு வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ஆளுநருக்கு நான் பேசியது புரியவில்லை என நினைக்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய் கறி சாப்பிடுபவர்கள் தானே.. அதைத்தான் நான் சொன்னேன். நாய் என்று சொன்னேன் என்று திரித்தால் அதனை எப்படி ஏற்றுக்கொள்வது. இவரை வேண்டுமானால் அப்படி சொல்லலாமே தவிர அவர்களை நான் ஏன் நாய் என்று சொல்லப் போகிறேன்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.