கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மோலி ஜாய் (61 வயது) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள மதவழிபாட்டு தளத்தில் கடந்த 29ஆம் தேதி காலை 9 மணியளவில் நடந்த குண்டு வெடிப்பு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் 12 வயது சிறுமி லிபினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சோதனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டு அக்டோபர் 31ஆம் தேதி எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோலி ஜாய் (61 வயது) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் 70% தீக்காயங்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 11 பேரில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.