நாகா மக்களை இழிவாக பேசிய ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட வேண்டும்: அண்ணாமலை

நாகா மக்களை இழிவாக பேசியிருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழக ஆளுநர் இங்கு உட்கார்ந்து கொண்டு நம் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார். வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்கிறார். நாகாலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? இவரை ஊரை விட்டே விரட்டி அடித்தனர். நாகாலாந்துகாரர்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள். அவர்களே இவ்வளவு சொரணையுடன் ஆளுநரை விரட்டினார்கள் என்றால் உப்பு போட்டு சாப்பிடும் நாம் எப்படி நடந்து கொள்வோம் என்பதை மறந்துவிடக் கூடாது. நாகாலாந்தில் இருந்து ஆளுநரை அனுப்பி வைத்த போது அதை மக்கள் பண்டிகை போல் கொண்டாடினார்கள். நாம் கொடுக்கும் மசோதாக்களிலும் அவர் கையெழுத்து போட மறுக்கிறார். இவ்வாறு ஆர் எஸ் பாரதி பேசியிருந்தார்.

இவருடைய பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். நாகா மக்கள் குறித்த கருத்துக்கு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அண்ணாமலை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்களின் அநாகரீகமான பேச்சுக்களால்தான் ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடந்தது. ஆனாலும் திமுக பாடம் கற்றுக் கொள்ளவில்லை. வடகிழக்கு மாநில சகோதரர், சகோதரிகளை நாய்க் கறி உண்பவர்கள் என கூறி அவர்களை சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. இந்திய கூட்டணியின் பார்வையில் இதுதான் இந்தியா என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் என் மண் என் மகக்கள் எனும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியிருந்தார். அவர் கூறுகையில், கடந்த 30 மாதங்களாக ஆர்.எஸ்.பாரதி இழிவாக பேசி வருகிறார். அவர் பேசுவது போல் தெருவில் செல்லும் நபர் கூட பேச மாட்டார். நாகா மக்களை இழிவாக பேசியிருந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும். ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய நாகாலாந்து போலீஸ் வருவதற்கு முன்பு தமிழக போலீஸ் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி போற்றி வருகிறார். வெளிநாடுகளுக்குச் சென்றாலும் திருக்குறள் சொல்கிறார். ஜல்லிக்கட்டு போட்டிகள் காட்டுமிராண்டித்தனம் என காங்கிரஸ் விமர்சித்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது என்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடிதான். பாஜகவினரை தமிழக அரசு கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்றார்.