ஆம்னி பஸ்கள் டிச.16க்கு பிறகு வெளிமாநில பதிவுடன் ஓட்ட முடியாது!

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்கள் டிச.16 க்கு பிறகு தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் விடுமுறை தினங்களிலும் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் தனியார் ஆம்னி பேருந்துகளையே நாடி செல்கின்றனர். இதனால் பண்டிகை நாள்களில் ஆம்னி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இது தவிர சாதாரண நாட்களிலும் ஆம்னி பஸ்களில் பலரும் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சொகுசு மற்றும் சரியான நேரத்திற்கு கொண்டு டிராப் செய்வது போன்ற காரணங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் பலரும் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது.

சாதாரண நாட்களில் சராசரியான கட்டணம் நிர்ணையிக்கும் ஆம்னி பஸ்கள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கட்டணத்தை பல மடங்கு ஏற்றி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுகிறது. அதிலும், சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்ல விமான கட்டணத்தை மிஞ்சும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டு வைக்கின்றன. பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வந்தாலும் இந்த புகார்கள் நீடித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கான கட்டண விவரங்களை ஆம்னி பேருந்துகள் சங்கம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெள்யிடப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் தீபாவளிக்கு 30 சதவீதம் கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.

இதனிடையே, பிற மாநிலங்களில் பதிவு செய்த ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறு பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுபதிவு செய்ய டிச.16 வரை அவகாசம் தர ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்கள் டிச.16 க்கு பிறகு தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதேபோல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.