சனாதன தர்மம் குறித்த தவறான புரிதல்களுடன் சிலர் விமர்சிக்கின்றனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி

உன்னதமான தத்துவத்தை உலகுக்கு வழங்கிய சனாதன தர்மம் குறித்த தவறான புரிதல்களுடன் சிலர் விமர்சிக்கின்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் காட்டமாக சாடியுள்ளார்.

சனாதன தர்மம் என்பது மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அது நியாயப்படுத்துகிறது; அதனால் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி முதல் ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். “இந்தியா” கூட்டணி தலைவர்களும் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது. இந்த பேச்சுக்காகத்தான் உதயநிதியின் தலையை வெட்ட வேண்டும்; நாக்கை அறுக்க வேண்டும் எனவும் சில சாமியார்கள் பரிசு தொகை அறிவித்திருந்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சு குறித்த வழக்கில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது ஏன் இன்னமும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். இதனை முன்வைத்து ஆளும் திமுக அரசை பாஜக கடுமையாக விமர்சிக்கிறது. ஆனாலும் சனாதனத்தை எந்நாளும் எதிர்ப்போம்; இது பல நூற்றாண்டுகால பிரச்சனை; எத்தனை வழக்குகள் வந்தாலும் எதிர்கொள்வோம் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதனையும் தற்போது பாஜக கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழாவில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இப்பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது:-

நீ, நான் என்கிற தத்துவம் எதுவும் இல்லை. நாம், நாங்கள் என்பதுதான் தத்துவம். உலகில் எந்த ஒரு தத்துவமும் இதனை போதித்தது இல்லை. உலகில் நடைபெறும் இன்றைய மோதல்களுக்கான விடையும் இதில்தான் இருக்கிறது. இது ஒரு மந்திர சொல். உலகத்துக்கு நமது பாரதம் நன்கொடையாக அருளியிருக்கிறது. ஆனால் சிலர் தவறான புரிதல்களுடன் சனாதன தர்மத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.