சனாதனத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து தொடரப்பட்ட வழக்கில் உறுதி மொழியை மீறிவிட்டதாக கூறி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது என உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
சனாதனத்திற்கு எதிராக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது இந்து முன்னணி நிர்வாகி கிஷோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பதவி பிரமாண உறுதி மொழியை மீறிவிட்டதாக அமைச்சர் மீது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அமைச்சராக ஒருவரை நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் முதல்வருக்குதான் அதிகாரம் உள்ளது என்றார்.
அரசியலமைப்பு சட்டம் மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை, நாத்திக கொள்கையையும் பாதுகாக்கிறது என்றும் வில்சன் வாதிட்டார். சனாதனத்தில் ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் உள்ளது என்றும் அவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தீர்ப்பு ஒன்றில் கூறியதையும் வழக்கறிஞர் வில்சன் மேற்கோள்காட்டி வாதிட்டார்.
மேலும் பேச்சுரிமை என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்றும், அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் வாதிட்ட வழக்கறிஞர் வில்சன், இப்படி ஒரு வழக்கை தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளனர் என்றும் தெரிவித்தார். சனாதன ஒழிப்பு மாநாடு ஒரு அரங்கில் நடைபெற்றது என்றும் பிடிக்காவிட்டால் அதை ஏன் கேட்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வில்சன் வாதத்தை முன் வைத்தார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி அனிதா சுமந்து வழக்கு விசாரணையை நாளைக்கு(இன்று) ஒத்தி வைத்தார்.