ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்ல, சுதந்திரப் போராளிகள்: கயல்விழி சீமான்!

பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி தலைமையில் அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறையினர் இன்று கண்டன போராட்டம் நடத்தினர்.

இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தத்தை நிறுத்த வேண்டும் என உலக நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தத்தை நிறுத்த கோரி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையினர் சென்னையில் இன்று இஸ்ரேல்- பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தினர். இந்தப் போராடத்துக்கு சீமான் மனைவியும் வழக்கறிஞருமான கயல்விழி தலைமை வகித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியினர், மத்திய அரசு, இஸ்ரேல் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இலங்கையில் நாங்கள் போராடிய போது தமிழர்களை நசுக்குவதற்கு இஸ்ரேல் நாடுதான் மிகப் பெரும் உதவியை செய்தது. ஹமாஸ் என்ற அமைப்பு சுதந்திரத்துக்காகப் போராடியக் கூடிய அமைப்பு. அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது என்பது நமது கொள்கைக்கு மிகவும் முரணான ஒன்றாகும். ஆகையால் இஸ்ரேல் சார்பான நிலைப்பாட்டை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை. அகில இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராடுவோம். இந்தியாவிலேயே முதல் முறையாக நாம் தமிழர் கட்சி இந்தப் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். இதன் மூலம் மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி அறைகூவல் விடுக்கிறது. இஸ்ரேல் எனும் கொடுங்கோல் அரசு காசா என்ற நிலப்பகுதியையே இல்லாமல் செய்துவிடுவதற்காக யுத்தத்தை நடத்துகிறது. காசாவை முழுமையாக ஆக்கிரமித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது என்றனர்.