லெபனானுடன் முழுமையாக போர் வெடிக்கும்: இஸ்ரேல் எச்சரிக்கை!

லெபனானுடன் ‘முழு அளவிலான போர்’ அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் கடும் கோபம் அடைந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல்கள் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் நடந்து வருகிறது. அக்டோபர் 7ம்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் குண்டு வீச்சு மற்றும் எல்லை கடந்து நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுப்பதாக அறிவித்து, இஸ்ரேல் போரில் குதித்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 11000 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். இறந்துபோனவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார். காஸாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை மீதும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர இறந்து போனார்கள். இஸ்ரேல் தரப்பில் 1200க்குமேற்பட்டோர் இறந்துள்ளனர். பெரும்பாலானோர் அக்டோபர் 7ம் தேதி சமயத்தில் இறந்தவர்கள் தான். இஸ்ரேல் தாக்குதலில் காஸா நகரம் முற்றிலும் நிலைகுலைந்து போய் உள்ளது. காஸாவின் மையப்பகுதிக்குள் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வரை போரை இஸ்ரேல் நிறுத்த வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது..

ஹமாஸ் அமைப்பிற்கும், இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும் நிலையில், தற்போது லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான எல்லையிலும் மோதல்கள் அதிகரித்துள்ளது. காசா மக்களுக்கு ஆதரவாக லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் ஏழு இஸ்ரேலிய வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்குள் 15 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் நான்கு ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் என்று கூறப்படுகிறது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் தீவிரமான தாக்குதலை முன்னெடுத்திருப்பதால், லெபனான் எல்லையில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் இஸ்ரேலிய மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டு விட்டார்கள். இந்த சூழலில் லெபனான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்து மேலும் 20,000 பேரை வெளியேற்ற இஸ்ரேல் அரசு முடிவு செய்திருக்கிறது.

ஹெஸ்புல்லாவின் ராக்கெட் ஆயுதக் களஞ்சியம் ஹமாஸின் ஆயுதக் களஞ்சியமாக இருப்பதாக நம்பும் இஸ்ரேல், லெபனானுக்கு எதிராக முழுமையான போருக்கான அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. லெபானின் இந்த ஹஸ்புல்லா குழுக்கள் கண்டிப்பாக எதிர்விளைவுகளை சந்திப்பார்கள் என்று இஸ்ரேல் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இதனிடையே ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லாவை ஆதரித்து வரும் ஈரானிடம் இந்த விவகாரத்தில் உடனே தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக குட்டெரெஸ் கூறுகையில், “ஹெஸ்பொல்லா இஸ்ரேல் மீது பெரிய தாக்குதலை நடத்தினால், அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று நான் உறுதியாக நம்புகிறேன் – லெபனான் நிச்சயம் தப்பி பிழைக்காது. ஈரான் எப்போதுமே தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுவார்கள், ஆனால் இந்த மோதல் நீட்டிக்கப்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் பகிரங்கமாக கூறுகிறார்கள். ஈரானின் நிலை மிகவும் மர்மமானது ” என்றார்.