கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பை கடன் வாங்க வேண்டாம் என்றும் முடிந்தால் கணிதம் மற்றும் அறிவியல் வகுப்புகளிலும் மாணவர்கள் விளையாடுவதற்கு அனுமதி கொடுங்கள் என கேட்டுக்கொள்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகள் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இங்கு வந்துள்ள மாணவ- மாணவியர் அத்தனை பேருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாவட்டத்திற்கு 3 அரசு பள்ளிகள் வீதம் மொத்தம் 114 பள்ளிக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்படுகிறது. இதேபோல் ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகள் 180 பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. பொதுவாக குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குவோம். ஆனால் அந்த குழந்தைகளை உருவாக்குகின்ற பள்ளிகளுக்கும் நாம் பரிசு வழங்குகின்றோம்.
எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் என 50க்கும் மேலான முன்னெடுப்புகளை நம் பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. இவற்றில் சிறந்து விளங்கும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர்களின் திறமையை மேம்படுத்துவது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, பள்ளி உள்கட்டமைப்பு, கழிவறை வசதி உள்ளிட்டவற்றை வைத்து வெளிப்படையான முறையில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒரு பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வாகிட அங்குள்ள மாணவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அந்த பள்ளி மற்ற பள்ளிகளுக்கும் முன்உதாரணமாக இருக்க வேண்டும்.
விளையாட்டில் திறமையான மாணவர்களை கண்டறித்து அவர்களை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்யுங்கள். ஒரு முக்கியமான விஷயம். ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பை கடன் வாங்காதீர்கள். மாணவர்கள் விளையாடுவதற்கு அந்த வாய்ப்பை கொடுங்கள். முடிந்தால் கணிதம் மற்றும் அறிவியல் வகுப்புகளிலும் விளையாடுவதற்கு அனுமதி கொடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.