உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேசமயம், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமானப் பணியின்போது சுரங்கம் இடிந்து விழுந்ததில், 40 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரவமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக, உத்தரகாண்ட் அரசு விபத்து குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவுக்கான காரணங்களை ஆய்வு செய்ய, உத்தராகண்ட் அரசு அமைத்த குழுவில் உள்ள நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மீட்புப் பணிகள் குறித்து உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ரோஹில்லா கூறுகையில், “மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழாய் மூலம் பாதுகாப்பு பாதை அல்லது சிறிய சுரங்கப்பாதை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு தேவையான பொருட்கள் வந்துள்ளன. அவர்களுக்கான பிளாட்ஃபார்ம் தயாரிக்கப்படுகிறது. அதன்பிறகு எஸ்கேப் டனல் (escape tunnel) அமைக்கும் பணியும் தொடங்கப்படும். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர் தொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக என்எச்ஐடிசிஎல் அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றார். மீட்புப் பணிக்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம். இதுவரை, உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.