பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தால் 5 மாநில தேர்தலில் பாஜக தோற்பது உறுதி என்றும் பல தொகுதிகளில் டெபாசிட் பறிபோகும் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர் லால் நேருவின் 135வது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கே.எஸ்.அழகிரி இதனைக் கூறினார். இந்தியாவில் ஒரு குண்டூசி கூட உற்பத்தி செய்ய முடியாத நிலை இருந்த போது அதனை மாற்றி நாட்டுக்கு புதிய முகம் கொடுத்தவர் நேரு என்றும் உலக நாடுகளுக்கு இணையாக தொழிற்கூடங்களை உருவாக்கியவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
மோடியும், அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் தங்களுக்கு வெற்றி உறுதி என்கிறார்கள் பாஜகவினர் என்றும், கர்நாடகத்தில் என்ன நடந்தது என்பதை பாஜகவினர் மறந்துவிடக் கூடாது எனவும் நினைவூட்டினார் கே.எஸ்.அழகிரி. கர்நாடகாவில் பாஜக தோற்றது மட்டுமல்ல 33 தொகுதிகளில் டெபாசிட் இழந்தார்கள் எனவும் அழகிரி விமர்சித்தார். இதனால் இப்போது 5 மாநில தேர்தலிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தால் பாஜக தோற்றுவிடும் என்றும் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சந்தித்த படுதோல்வியை போல் 5 மாநில தேர்தலிலும் பாஜக தோல்வியை சந்திக்கும் என்றவர், பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் காங்கிரஸ் என்ன செய்தது எனக் கேட்பதற்கு பிரதமர் மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என்றார். ஓபிசிக்கும், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து அவர்களை கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் முன்னேற வைத்தக் கட்சி காங்கிரஸ் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல நாட்டில் சமூக நீதியை நிலை நாட்டியதும் காங்கிரஸ் ஆட்சி தான் என பெருமிதம் தெரிவித்தார்.