உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: சக தொழிலாளர்கள் போராட்டம்!

உத்தராகண்ட மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் புதிய நிலச்சரிவால் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளே சிக்கியிருப்பவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று சக தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 4-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) நடந்து வருகிறது. தீவிரமாக நடந்து வரும் மீட்பு நடவடிக்கைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட புதிய நிலச்சரிவால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சுரங்கப் பாதை விபத்து நடந்த இடத்தில் மற்ற சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களை விரைவாக மீட்கக் கோரி நடந்த இப்போராட்டத்தில், “எங்கள் ஆட்களை வெளியே எடுங்கள்” என்று முழக்கமிட்டனர்.