மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கர்வம் மிக்கவர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றது. தாட்டியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-
ஜோதிராதித்ய சிந்தியா உயரம் குறைந்தவர். ஆனால், கர்வம் மிக்கவர். உத்தரப் பிரதேசத்தில் அவரோடு நான் பணியாற்றி இருக்கிறேன். அவரைப் பார்க்கச் செல்பவர்கள் அவரை மகாராஜா என்று அழைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் சென்ற காரியம் வெற்றி பெறாது. ஜோதிராதித்ய சிந்தியாவின் குடும்ப பாரம்பரியம் அப்படி. பலர் முதுகில் குத்தி இருக்கிறார்கள். ஆனால், இவர், குவாலியர் மக்களின் முதுகில் குத்தியவர். அவர் ஒரு துரோகி.
நரேந்திர மோடி எப்போதும் அழுது வடிகிறார். தேரே நாம் என்ற இந்தி படத்தில் சல்மான் கான் தொடக்கம் முதல் இறுதி வரை அழுது வடிவார். அதுபோல, நரேந்திர மோடியும் அழுது வடிகிறார். நரேந்திர மோடி குறித்த படமான மேரே நாம் படமும் கூட அப்படித்தான் இருந்தது. துரோகிகளை தன்னோடு சேர்த்துக் கொள்பவராக மோடி இருக்கிறார். பல்வேறு கட்சிகளுக்கு துரோகம் இழைத்து விட்டு வந்தவர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு செயல்படுகிறார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் உண்மை விசுவாசிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். எனினும், 2020-ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேருடன் பாஜகவில் இணைந்ததை அடுத்து, கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதை குறிப்பிடும் வகையிலேயே, பிரியங்கா காந்தி ஜோதிராதித்ய சிந்தியாவை விமர்சித்துள்ளார்.