பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயிர் காப்பீட்டுக்கான தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் தமிழக அரசு சார்பில் நீட்டிப்பு செய்ய கடிதம் எழுதப்பட்ட நிலையில் அதனை பரிசீலனை செய்து மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கான காப்பீடு செய்ய மத்திய அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது. மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் பயிர் காப்பீடுகள் விவசாயிகளுக்கு செய்து கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி (இன்று) வரை விவசாயிகளுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இந்த காலஅவகாசம் என்பது இன்றுடன் முடிவடைகிறது. இது தமிழ்நாட்டில் பல விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அதாவது வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருப்பது, தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையை எதிர்கொண்டனர். அதாவது தமிழ்நாட்டில் 60 சதவிகிதம் வரையிலான விவசாயிகள் மட்டுமே தற்போது வரை பயிர் காப்பீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பா, தாளடி பயிர்களுக்கான காப்பீடு காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தமிழக வேளாண் ஆணையம் எல்.சுப்பிரமணியன் சார்பில் மத்திய வேளாண் துறைக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அதில் ‛‛அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் உட்பட மொத்தம் 27 மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதியுடன் அவகாசம் நிறைவடையவுள்ளது. பருவமழை தாமதம், காவிரியில் போதிய நீர் திறக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் பயிர் நடவு தாமதமாகியுள்ளது. பண்டிகை கால தொடர் விடுமுறையால் விவசாயிகளால் பயிர்க் காப்பீடு செய்ய முடியவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு அவகாசத்தை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதனை பரிசீலனை செய்த மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசத்தை வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து கூடுதல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது. தற்போது பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான சேவை மையங்களை விவசாயிகளுக்கு ஏற்ப திறந்து இருக்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.