கேரள நர்ஸுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை!

ஏமன் நாட்டிற்குச் சென்றிருந்த கேரள நர்சுக்கு கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்கள் பலரும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம். அப்படி இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்தியர்கள் அதிகம் செல்வார்கள். குறிப்பாகக் கேரளாவில் இருந்து இங்கே செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அப்படி மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டிற்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ஒருவருக்குக் கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா வேலை தேடி ஏமன் நாட்டிற்கு சென்றார். அங்கே அவர் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே கடந்த 2017இல் அவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்ற வழக்கில் கைதானார், அப்போது முதலே அவர் சிறையிலேயே இருந்து வருகிறார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து ஏமன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதை நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. ஏமன் நாட்டில் பிரியாவின் பாஸ்போர்ட்டை அங்குள்ள தலால் அப்தோ மஹ்தி என்பவர் பிடுங்கி லாக்கரில் வைத்துள்ளார். அங்கே வேலை பிடிக்காமல் பிரியா நாடு திரும்ப முயன்ற நிலையில், அப்தோ பாஸ்போர்ட்டை கொடுக்காமல் மிரட்டியுள்ளார். இதனால் அவரிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ள லாக்கரின் பாஸ்வோர்ட்டை வாங்க அவருக்குப் பிரியா மயங்க ஊசி போட்டுள்ளார். அப்போது மயக்க மருந்து அதிகரித்த நிலையில், அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் தான் இப்போது பிரியாவுக்கு மரண தண்டனையை ஏமன் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

முன்னதாக ப்ரியாவின் தாய் தன்னை ஏமன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாகக் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியக் குடிமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனது மகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கே செல்ல தன்னை அனுமதிக்குமாறு பிரியாவின் தாய் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். உயிரிழந்த அந்த தலால் அப்தோ மஹ்தி குடும்பத்திடம் சென்று சமரசம் பேசவே பிரியாவின் தாயார் முயற்சி எடுத்து வருகிறார். இதற்காகவே அவர் ஏமன் செல்ல முயன்று வருகிறார்.

இந்த வழக்கில் பிரியாவின் தாயார் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் சுபாஷ் சந்தரன், “பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதே பிரியாவை காக்க இருக்கும் ஒரே வழி. ஆனால் இந்தியர்களுக்குப் பயண தடை இருக்கிறது. எனவே, அரசு இதில் தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

வியாழக்கிழமை இது தொடர்பான வழக்கில் ஏமனுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை தளர்த்தப்படலாம் என்றும், அவசர தேவைகளுக்குக் குறுகிய நாட்கள் ஏமன் நாட்டிற்குச் செல்ல இந்தியர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அடுத்த ஒரு வாரத்தில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும்படி உத்தரவிட்டது. கடந்த வியாழக்கிழமை இது உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இந்தச் சூழலில் தான் ஏமன் சுப்ரீம் கோர்ட் நர்ஸ் பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டையை உறுதி செய்துள்ளது. பிரியாவின் தாயாருக்கு இன்னும் ஏமன் செல்ல அனுமதி கிடைக்காத நிலையில், இந்த உத்தரவு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.