நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை விஜயசாந்தி, கடந்த 1998 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். முதன்முதலில் அவர் பாஜகவில் இணைந்து பணியாற்றினார். பாஜக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறிய விஜயசாந்தி, கடந்த 2020 ஆம் ஆண்டு மீண்டும் தாய் கட்சியான பாஜகவில் இணைந்தார்.
இதற்கிடையில், தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர் பாஜகவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. விஜயசாந்தி தனது பதவி விலகல் கடிதத்தை மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், நடிகை விஜயசாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இன்று (நவ.17) இணைந்தார். தெலங்கானா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சில முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில் நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.