அனுமதியின்றி பாலத்தை திறந்து வைத்ததாக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரின் லோயர் பரேல் பகுதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியை மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் வியாழன் இரவு திறந்துவைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இரண்டு வாரங்களுக்கு முன்பு பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததாகவும், ஆனால் அதைத் திறந்து வைக்க மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நேரமில்லாததால் அது பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை என்றும் ஆதித்ய தாக்கரே குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில் குடிமை அமைப்பின் அனுமதியின்றி பாலத்தை திறந்து வைத்ததாக ஆதித்ய தாக்கரே மீது பிரஹன்மும்பை நகராட்சி அதிகாரி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த பாலம் ஆதித்ய தாக்கரேவின் வோர்லி தொகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.