சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை நாய்கள் என்று கூறிய செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை, அனுமதியின்றி அமைச்சர்களின் வீட்டுக்குள் நுழையும் நாய்கள் என்ற யூகத்தில் பேசுகிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேசினார்கள். சட்டசபையில் பேச ஆரம்பிக்கும் போது செல்வப்பெருந்தகை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மாண்புமிகு அமைச்சர்கள் வீடுகளில் எல்லாம், ஏதோ நாய் நுழைவது போல் நுழைகிறார்கள்.. அப்போது குறுக்கிட்ட அப்பாவு அந்த வார்த்தை வேண்டாம் சட்டசபை அவை குறிப்பில் நீக்கப்படும் என்றார். அதற்கு செல்வப்பெருந்தகை.. நான் யாரையோ சொல்கிறேன்.. யாரையும் புண்படுமாறு நான் கூறவில்லை என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை, அனுமதியின்றி அமைச்சர்களின் வீட்டுக்குள் நுழையும் நாய்கள் என்று பொருள்படும்படி பேசுகிறார். மாநிலத்தில் சிபிஐ-க்கு அளிக்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்பப் பெறுவது, வருமான வரித்துறை அதிகாரிகளை காயப்படுத்துவது மற்றும் அரசு அதிகாரிகளை நாய்கள் என ஊகிப்பது ஆகியவை அதிகாரங்களை ஊழல் செய்ய பயன்படுத்தியதற்காக பிடிபடுவோம் என்ற பயத்தின் விளைவு மட்டுமே” என்று கூறியுள்ளார்.