அமமுக அமைப்பு செயலாளர் மகேந்திரன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான உசிலம்பட்டி மகேந்திரன் அதிமுகவில் இணைந்துள்ளது அமமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவர் உசிலம்பட்டி மகேந்திரன். 2006 சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏவாக இருந்தார். இவர் ஜெயலாலிதா மறைவிற்குப் பின் கட்சியில் ஏற்பட்ட பிளவால் டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கிய நிலையில் அக்கட்சியில் இணைந்தார். அமமுகவின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்தார் மகேந்திரன். மேலும், அமமுக மதுரை மாநகர் புறநகர் மாவட்ட செயலாளராகவும், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார் மகேந்திரன். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், உசிலம்பட்டி ஐ.மகேந்திரன் அமமுகவில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி, ஆர்பி உதயகுமார் ஆகியோர் முன்னிலையில், அதிமுகவில் மீண்டும் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் மகேந்திரன். அவருடன் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைந்தனர்.

மதுரை உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன் அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவியுள்ளது அமமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.