கவர்னர், முதல்வர் முன்னிலையில் பழங்குடியினரை இழிவுபடுத்தியது வக்கிரபுத்தி: நாராயணசாமி

கவர்னர், முதல்வர் முன்னிலையில் பழங்குடியினரை இழிவுபடுத்தியது பாஜக கூட்டணியின் வக்கிரபுத்தியை காட்டுகிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். இது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அப்போது பாஜவும், மோடியும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

ரங்கசாமி ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொன்னார்கள். அறிவித்த திட்டங்களையே செயல்படுத்த முடியவில்லை. ஆனால் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ரங்கசாமி கூறுவது அப்பட்டமான பொய். வில்லியனூர் பெண் காவலர் தற்கொலை விவகாரத்தில் அவரது கணவரை கைது செய்துள்ளனர். இதில் பல மர்மங்கள் உள்ளது. தன் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை கொடுத்த புகாரை காவல்துறை ஏற்கவில்லை. இதை விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். எனவே டிஜிபி நேரடியாக தலையிட்டு விசாரிக்க வேண்டும். பழங்குடியினரை கவுரவிக்கும் விழாவில் பழங்குடி மக்களுக்கு ஒரு இருக்கை கூட போடாமல் தரையில் அமர வைத்து இழிவுபடுத்தியுள்ளனர். இது பாஜ கூட்டணியின் வக்கிரபுத்தியை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.