நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் ஷாபூரா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அசோக் கெலாட் தலைமையிலான அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாதவர்கள் ஆட்சி நடத்துவதற்கே தகுதி இல்லாதவர்கள். தேர்தல் அரசை அமைப்பதற்கு மட்டுமல்ல, சமூகத்தையும், நாட்டையும் வடிவமைப்பதற்கும் முக்கியமானவை ஆகும். ஒரு அரசாங்கமானது ஜாதி, மத அடிப்படையில் நடத்தப்படாமல், மனிதநேய அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மோடி தலைமையிலான அரசு அந்தவகையில் நடத்தப்படுகிறது. மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் மதிப்பு சர்வதேச அரங்கில் பலமடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டிசம்.3-ஆம் தேதி இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.