சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (வயது 75). இவர், கடந்த 1987-ம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஈரோடு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக போலீசாரால் ஒரு வழக்கில் மாதையன் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் கோவை மத்திய சிறைக்கும், அதன்பிறகு சேலம் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டார். கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உள்ள அவர் இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாதையன், அவ்வப்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார். இதனால் அவருக்கு சிறை அதிகாரிகள் பரோல் வழங்கி வந்தனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி மாதையன் நெஞ்சுவலி காரணமாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவர் ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார், மாதையனின் மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாதையனின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாதையன் மரணம் தொடர்பாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது சமூக வலைதளப் பக்கங்களில் எழுதியிருப்பதாவது:-
வீரப்பனுடைய சகோதரர் மாதையன் உடல்நலமில்லாமல் மரணித்துள்ளார். 33 ஆண்டுகளாக கோவை சிறையில் ஆயுள்சிறைவாசியாக வாடி வந்தார்.இப்போது சேலம் சிறையிலிருந்த போது தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல் நலமில்லாமல் இறந்து போனார். கடந்த 3.10.2017 அன்று மாதையனை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனாலும் அன்றைய அரசு விடுதலை செய்ய மறுத்துவிட்டது. சிதம்பரநாதன் எனும் வனக்காவலரை சுட்டுக்கொன்றதாகத்தான் இவர் மீது வழக்கு. இவருடன் சேர்ந்து ஆண்டியப்பன்,பெருமாள் ஆகியோரும் ஆயுள்சிறைவாசிகளாக வாடி வருகின்றனர்.87வயதை கடந்து உடல் நலமில்லாமல் விடுதலைக்காகவும் தனது மனைவி மாரியம்மாளை காணவும் ஏங்கிக்கொண்டிருந்தவர் இப்போது உயிரோடு இல்லை.
14ஆண்டுகள் ஆயுள்சிறைவாசிகளாக இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் உள்ளன. ஆனாலும் விடுதலை கனவாகவே போனது. ஆகவே, மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் கருணை கூர்ந்து 14 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாநில அரசுக்கான அதிகாரத்தை வரையறுத்துள்ளது. ஆகவே, மீதமுள்ள ஆயுள் சிறைவாசிகளை மனிதநேயத்துடன் விடுதலை செய்ய மாண்புமிகு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாற்று வன்னி அரசு எழுதியுள்ளார்.