30 ஆண்டுகளுக்கு நாட்டின் அரசியல் பாஜகவைச் சுற்றியே சுழலும்: பிரசாந்த் கிஷோர்

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும் என்று பிரபல தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியின் தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். மேலும், கட்சி ரீதியாகவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு வெளியே மட்டுமின்றி கட்சிக்குள்ளேயும் குரல்கள் எழுந்தன. இந்தச் சூழலில் தான், கடந்த மாதம் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை முன்மொழிந்து இருந்தார். அவரது திட்டம் குறித்து காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவது நடக்காமல் போனது.

பாஜகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய பெருமைக்குரிய நபரான பிரபல தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கட்சியில் சேர அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதையடுத்து, தனிக்கட்சி ஆரம்பிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் மேற்கு சம்பாரனில் உள்ள மகாத்மா காந்தியின் பிதிஹர்வா ஆசிரமத்தில் இருந்து 3,000 கிமீ பாதயாத்திரை செல்லவுள்ளதாகவும் பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும் என்று பிரபல தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ள பிரஷாந்த் கிஷோர், பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 வருடங்களுக்குள் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளார்.

“எந்தவொரு விஷயமோ அல்லது கருத்தியலோ அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் அது சரிவை சந்திக்கும் என்பதுதான் விதி. எனவே பாஜகவுக்கும் இந்த நிலை ஏற்படும் என பலரும் கருதுகின்றனர்; இதனை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இந்த விஷயம் இப்போது உடனே நடைபெற்றுவிடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 வருடங்களுக்குள் நடைபெறாது.” என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால், அக்கட்சி அவ்வளவு எளிதில் வலுவிழந்து விடாது என்று சுட்டிக்காட்டியுள்ள பிரஷாந்த் கிஷோர், அதற்காக, இனி வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என தாம் கூறவில்லை எனவும், ஆனால், அடுத்த 20 – 30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்திதான் இந்திய அரசியல் சுழலும் என்றுதான் கூறுகிறேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இன்னும் சரியாக கூற வேண்டுமென்றால், நீங்கள் அடுத்த 20 – 30 வருடங்கள் பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும்; இல்லையெனில் எதிர்க்க வேண்டும். மாறாக அக்கட்சியை உங்களால் புறக்கணிக்க முடியாது என்ற சூழலே நிலவும். சுதந்திர இந்தியாவில் முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது என்றும் பிரசாந்த் கிஷோர் சுட்டிக்காட்டியுள்ளார்.