அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி போராட்டம்: அமைச்சரின் வீடு எரிக்கப்பட்டது!

ஆந்திராவில் அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. நீர்பாசனத் துறை அமைச்சர் விஷ்வரூப் முகாம் அலுவலகம் சூறையாடி தீ வைத்து எரிக்கப்பட்டது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்களை பிரித்து கூடுதலாக 13 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த அமலாபுரத்தை மாவட்ட தலைநகராக வைத்து கோணசீமா மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என அரசு முடிவு செய்து அறிவித்தது. இதற்கு, அப்போது பலர் ஆதரவு தெரிவித்த நிலையில் பெயர் வைக்கப்பட்ட பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் பெயரை நீக்கிவிட்டு மீண்டும் கோணசீமா மாவட்டம் என்ற பெயரே தொடர வேண்டும் என பல்வேறு சமூகத்தை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று அமலாபுரம் நகரிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணி சென்றனர். அப்போது சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அங்கு ஏற்கனவே, கூட்டங்கள் அல்லது பேரணிகளை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்களின் பேரணியை போலீசார் தடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதேநேரத்தில் சிலர் எஸ்பி வாகனம் மற்றும் பஸ்கள் மீது கற்களை வீசினர். இந்த சம்பவத்தில் எஸ்பியின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் காயமடைந்தார். பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. நிலைமை கை மீறியதால் மாவட்ட எஸ்பி சுப்பா தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க உத்தரவிட்டார்.

அமலாபுரத்தில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் கல்லூரி பஸ்சில் ஏற்றினர். அப்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டகாரர்கள் அந்த பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். மேலும், நீர்பாசனத்துறை அமைச்சர் விஷ்வரூப் முகாம் அலுவலகத்தை சூறையாடி தீ வைத்து கொளுத்தினர். இதனால் தீ பற்றி எரிந்தது. இதனால், பல்வேறு இடங்கள் போர்க்களம் போல் மாறியது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அமலாபுரத்தில் 4 டிஎஸ்பிக்கள், 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணிகள், போராட்டங்கள் அல்லது பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியில்லை என எஸ்பி தெரிவித்துள்ளார். மாவட்ட பெயர் மாற்றம் தற்போது முதல்வர் ஜெகன்மோகன் அரசுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது. கோணசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்ட வேண்டும் என்று அம்பேத்கரின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். தற்போது, பெயர் மாற்றிய பிறகு இப்போது கோணசீமா பெயரே இருக்க வேண்டும் என போராட்டங்கள் நடந்து வருகின்றன

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பலர் காயம் இந்த வன்முறைச் சம்பவம் குறித்து கோனசீமா மாவட்ட கண்காணிப்பாளர் சுப்பா ரெட்டி கூறுகையில், “இந்த வன்முறையில் போலீசார் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். சரியாக எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை. மாவட்டத்தின் பெயரை மாற்றும் விவகாரம் குறித்த பல்வேறு பிரிவு மக்களால் தொடங்கப்பட்ட ஆன்லைன் பிரசாரம் காரணமாகவே இந்த வன்முறை நடந்துள்ளது” என்றார்.