காசா நிலவரம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
கடந்த அக். 7-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில் இஸ்ரேலை சோ்ந்த சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றனா். இதைத் தொடா்ந்து, காசா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. காசா நகரத்தில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் காசாவில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் பாதிப்புக்குள்ளாகியுள்ள காசா நிலவரம் குறித்து சீனா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் அதிபர்களும் இன்று தொலைபேசியில் பேசியுள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் குறித்த தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக மனிதாபிமானத்துக்கு எதிரான செயல்களை தடுக்க வேண்டும் என்றும் பேசியுள்ளனர். மேலும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
காசா நிலவரம் குறித்து பெய்ஜிங்கில் சீனா, பிரான்ஸ், இந்தோனேசியா, எகிப்து, சௌதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் இணைந்து ஆலோசிக்கவுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக சீனா, பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.