ஒரே நாடு, ஒரே தேர்தலை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தலை நாட்டின் நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது:-

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு ஓர் உயர்மட்ட குழுவை நியமித்தது. அதற்கு நான் தலைவராக நியமிக்கப்பட்டேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஏற்கெனவே இருந்தது. அந்த பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக உயர்மட்டக் குழு, பொதுமக்களுடன் இணைந்து அரசுக்கு தங்கள் ஆலோசனைகளை வழங்கும். நாட்டின் அனைத்து தேசிய கட்சிகளுடனும் நான் பேசினேன். அவர்களின் கருத்துகளைக் கேட்டேன். ஏதோ ஒரு கட்டத்தில் அனைவருமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன் கருதி இதனை உறுதியுடன் ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரம் முழுக்க முழுக்க நாட்டின் நலன் சார்ந்தது. இவ்வாறு ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.